"நகரா" தீர்ப்பு
கடந்த கட்டுரை பகுதி 2ல் ஓய்வூதியம் பற்றி ஒரு தெளிவான முடிவிற்கு வந்து சேர்ந்தோம். அதாவது "ஓய்வூதியம் என்பது முன் செய்த பணிக்கு பின் வழங்கும் பின் ஊதியம்" என்பது புலனாகிறது.
இதன் வழியில் EPF என்றோ அல்லது CPF என்றோ அழைக்கப்படும் வைப்பு நிதிக்கு இறுதியாக வட்டியுடன் வழங்கப்படும் மொத்த தொகையையும் ஓய்வூதியம் என்றே கொள்ளலாம். Provident Fund விதிப்படி பணியாளரும், பணிவழங்குபவரும் சரியான அளவில் பணம் செலுத்த வேண்டும். பெறும் ஊதியத்தில் பணியாளர் செலுத்தும் பங்கும், அதே அளவு நிர்வாக தரப்பிலும் (தற்போது உச்ச நீதி மன்றம் சில மாறுதல்களை வழங்கி ஆணையிட்டுள்ளது. அதை பின்பு விரிவாக காண்போம்) நிர்ணயிக்கப்பட்ட தொகையில் பிடித்தம் செய்யப்படும். ஒய்வு பெறும்போது அச்சேமிப்புக்கு உரிய வட்டி சேர்த்து மொத்த தொகையாக வழங்கப்படுகிறது. இதை ஈட்டிய ஊதியம்- ஈட்டூதியம் என கணக்கில் கொள்ளலாம். 4வது ஊதியக்குழுவின் கவனத்திற்கு பணியாளர்கள் சார்பாக அளிக்கப்பட்ட மனுவில் PF ல் செலுத்தும் பணத்தை ஒரு வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தி, ஓய்வு பெறும் போது ஈட்டியுள்ள வட்டியிலிருந்து மட்டுமே இறுதியாக பெற்ற ஊதியத்திற்கு இணையான தொகையை ஓய்வூதியமாக மாதா மாதம் வழங்க முடியும் என எடுத்துரைக்க ப்பட்டது. ஆனால் இதன்மேல் இன்று வரையிலும் எவ்வித பதிலும் அரசிடமிருந்து இல்லை.
இதே முடிவை 1982ல் வியன்னாவில் ஐக்கிய நாட்டு அமைப்பின் ஆலோசனைப்படி கூடிய உலக நாடுகளின் முதியோர் மாநாட்டில் ஓய்வூதியம் என்றால் ஈட்டிய ஊதியம் (Earned Income) என தெளிவாக அறிதியிட்டு பிரகடனம் செய்தது. ஆகவே இது நமது ஈட்டூதியம் அல்லது சேமிப்பு அல்லது தாமதிக்கப்பட்ட ஊதியம் (Deferred pay or wages) என்பதும் புலனாகிறது. இவைகளைப்பற்றி முதலில் நாம் தெளிவானால் தான் அதிகார வர்க்கம் எழுப்பும் அனைத்து தடைகளையும் எதிர்த்து வெற்றி பெறமுடியும்.
இம்மாதிரியான பல முடிவுகள் ஓய்வூதியத்திற்கு ஆதரவாக வரவே இந்திய அரசு தனது நிதித்துறையின் மூலமாக "ஓய்வூதியம் என்பது பரிசு அல்ல அது அரசின் பொறுப்பு" என்ற முடிவினை வெளியிட்டது (U.N.NO.D 2776/EV/52 DT 8.5.1959) அந்த முடிவின் அடிப்படையில் ஓய்வூதியத்தை உரிமையாக கோரி பெற வழிவகை ஏற்பட்டது. ஆனால் அரசு காலப்போக்கில் இதை மறைத்து ஒரு பணியாளர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அரசுடன் யாதொரு தொடர்பும்(No Nexus) இல்லை என்றுரைத்தது. அக்கூற்றினை நிதி அமைச்சர் தொடங்கி அதிகார வர்க்கம் முழுதும் விடாப்பிடியாக வலியுறுத்தி வந்தனர்.
இவ்வீண் பிடிவாதம் 17.12.1982ல் உச்ச நீதி மன்றம் வழங்கிய உன்னதமான தீர்ப்பால் அடித்து நொறுக்கப்பட்டது. அப்புகழ் பெற்ற தீர்ப்பு தான் "நகரா தீர்ப்பு". "பென்சன் என்பது கருணை தொகை அல்ல". ஓய்வு பெற்ற பணியாளரின் மறுக்க முடியாத உரிமை. பணியிலுள்ள ஒருவர் என்ன வசதியான வாழ்க்கை வாழ்ந்தாரோ அதே நிலையில் அத்துனை வசதிகளுடன் வாழ வேண்டும் என்று அறிதியிட்டு வழங்கிய தீர்ப்பு. இந்நிலையிலும் மத்திய அரசின் ஓய்வூதிய அமைச்சருடன் தன்னார்வ நிறுவனங்களின் நிரந்தர குழு (Standing committee of voluntary agencies) நடத்திய கலந்துரையாடலின் போது நகரா தீர்ப்பு அரசுக்கு எதிரானது, ஏற்கக் கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதிலிருந்து ஓய்வூதியத்திற்கு எதிரான மனநிலை அதிகார வர்க்கத்தில் ஆழமாக உள்ளது என்பது கண்கூடு். அத்தீர்ப்பின் மூலம் பெறப்பட்ட ஓய்வூதிய உரிமைகளை எவ்வழியாவது பறித்து விட தொடர் முயற்சி அரசு மேற்கொண்டு வருகிறது என்பது நிதர்சனமே. ஆனால் மூத்தோர் பெருந்திரள் ஒருநாளும் அனுமதிக்காது என்பதும் திண்ணமே.
இனி பின்ஊதியம் என்ற ஓய்வூதியம் எவ்வாறெல்லாம் வளர்ந்தது என ஆராயலாமா? வாருங்கள் பகுதி 4க்கு.
தொடரும்.....
Really superb. Doing beautiful work on your leisure time.👍👍👍
ReplyDeleteநன்றி எனது அருமை தம்பி.
Deleteநம்மில் பலருக்கு நகரா என்பவர் யார் என் றே தெரியாமல் இருக்கின்ற நிலையில் ஓய்வு ஊதியத் தந்தையை அறிந்துகொள்ளச்செய்தமைக்கு நன்றி.
ReplyDeleteஉண்மைதான் ஓய்வூதியர்களுக்கு சமுதாயத்தின் ஒரு இடத்தை பெற்றுத் தந்தவர் நகரா.நன்றி
ReplyDelete