Thursday, October 4, 2018

ஓய்வூதியம் என்றால் என்ன? பகுதி 4

ஓய்வூதிய மாற்றம்
23 வது சட்டமாக இயற்றப்பட்ட "Pension act" 1871 ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. அன்றைய தினத்தில் அரசுப்பணியிலிருந்த அன்னிய ஆங்கிலேய நாட்டவருக்காக இச்சட்டம் ஆங்கிலேய அரசால் இயற்றப்பட்டது. இந்திய நாடு சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் கடந்த நிலையில், 147 ஆண்டுகளுக்கு முந்தைய நாளில் இயற்றப்பட்ட "Pension Act" என்ற உளுத்துப்போன சட்டத்தினை இன்றுவரை விடாமல் தூக்கிகொண்டு அலைகிறோம் என்பது வேதனையின் உயர்மட்டமாகும். அதுவும் அச்சட்டங்கள் பல மாமாங்களை கடந்தும், பல நீதிமன்றங்களின் தன்னிச்சையான தீர்ப்புகளால் சக்தியற்றுப்போய் ஏட்டளவில் உள்ளது என்பதே உண்மையாகும்.

இந்த சூழலில், பலகட்ட தொடர் முயற்றசிக்குப் பின், முன்னாள் அமைச்சர் திரு.காட்கில் மாற்று சட்ட மசோதா சமர்பித்த பின்பும் அரசும், அதிகார வர்க்கமும் விடாப்பிடியாக ஆங்கிலேய அரசு விட்டுச்சென்ற அடிமை சட்ட வடிவுகளை மாற்ற மறுக்கிறது. இந்த அரைகுறை ஓய்வூதிய சட்டங்களும் நமக்கு குறைந்த பட்ச நலன்களை அவ்வப்போது அளித்திருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் மறுதளிக்க முடியாது. அவைகளில் ஒன்று 1834 மற்றும் 1887 ஆம் ஆண்டுகளில் பணிநிறைவு தொடர்பான சட்டங்கள் இயற்றப்பட்டது. அதனடிப்படையில் அன்னிய நாட்டவர்கள் பணி ஓய்வு பெற்ற போது உருவான காலிப்பணியிடங்களில் இந்திய நாட்டவர்களையும் பணியில் அமர்த்த வேண்டும் என்ற கட்டாய தேவைகளும், கோரிக்கைகளும், ஏழுப்பப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 1896-1897 ஆம் ஆண்டில் எட்சிசன் ஊதியக்குழு ( Atchison Commission ) அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகளை பெறப்பட்டது. இவ்வறிக்கையில் ஒப்பந்தப்பணி (Covenantee) ஒப்பந்தமற்ற பணி ( Noncovenantee) என இரு பிரிவுகளை உருவாக்கியது. ஒப்பந்தபணி அனைத்திலும் அன்னிய ஆங்கில நாட்டவரும், ஒப்பந்தமற்ற பணியில் இந்திய நாட்டவரும் பணி அமர்த்தப்பட்டனர் ஒப்பந்த பணியாளர்கள் Superior service என்றும் நம் நாட்டவர் Inferior service என்றும் பாகு படுத்தப்பட்டனர். இக்காலத்தில் ஆளுநர் மெக்காலே பிரபு இந்திய நாட்டவருக்கு ஆங்கில மொழி கற்றுத்தந்து அவர்களை எழுத்தர்களாக (Clerks) அரசுப் பணியில் நியமிக்கப்பட்டனர். இப்போது அரசுப்பணியில் இருந்த அயல்நாட்டவர்கள் Imperial Services என்றும் இந்திய நாட்டவர்கள் Provincial Services என்றும் பிரிக்கப்பட்டனர். இவர்களுக்கான ஊதியம் மற்றும் பின் ஊதியம் வேறுபட்டது. இதற்கு பின் 1908ல் சர்ஜேம்ஸ் குழுவும், லால் குழுவும் அமைக்கப்பட்டு பரிந்துரைகள் பெறப்பட்டது. ஆனால் அப்பரிந்துரைகளில் சிறப்பான அம்சங்கள் இல்லாத நிலையில் அனைவரின் கவனத்தை அவ்வறிக்கைகள் ஈர்க்கவில்லை.

1912-1915ல் இஸ்லிங்டன்குழு (Islington Commission) அமைக்கப்பட்டது. இக்குழு முதல்முறையாக மற்றைய அதிகாரங்களுடன் இந்திய தன்மையுடன் ஆங்கில அமைப்பை ஒத்திட்டு இந்திய நாட்டவர்களுக்கு ஓய்வூதியம், ஈட்டூதியம் போன்றவற்றை பரிசீலிக்குமாறு பணிக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகள் 1915 , ஆகஸ்டில் பெறப்பட்ட போதும், உலகமகா யுத்தத்தினால் அமல்படுத்த முடிவில்லை.ஆகவே அக்குழுவின் அறிக்கை 1919 ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டது. இவ்வூதியக்குழு தான் முதன்முறையாக இந்திய நாட்டிற்கான பணிவிதிகள், ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான வழிமுறைகளை அறிக்கைகளாக அளித்து சட்டமியற்ற உதவியது. இதனடிப்படையில் அன்னிய மற்றும் இந்திய பணியாளர்களின் பாகுபாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டனர். இந்த ஒருங்கிணைப்பை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது தான் " Civil Service Regulations" ஆகும்.

இராணுவத்தில் பணியாற்றுபவர்கள் தவிர்த்து, மற்ற பணியாளர்கள் அனைவருக்கும் இவ்விதிகளின் படியே அனைத்து ஓய்வூதியம் மற்றும் ஈட்டூதியங்கள் 1972 வரை வழங்கப்பட்டது. 1919 ல் இயற்றப்பட்ட விதிகளின் படி ஊதியம், ஓய்வூதியம் முதலியன 09.08.1919 முதல் அமலுக்கு வந்தது. ஆகவே இந்நாளுக்கு முன் மற்றும் பின் பணியேற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதிய நலன்கள் முன், பின் என பிரிக்கப்பட்டது.
தொடரும்.....

வருத்தம் கோரல்.

எனது அன்பு வாசகர்களே, வணக்கம். வாரம் ஒருமுறை தொடராக எழுதுவேன் என்ற வாக்குறுதியை என்னால் கடைப்பிடிக்க முடியாமல் போனதிற்கு எனது தாழ்மையான வருத்தத்தினை உங்களிடம் சமர்பித்துக் கொள்கிறேன்.

எனது உடல் நலமின்மை மற்றும் குடும்ப வேலைகாரணமாக இக்கால தாமதம். ஆகவே பொறுதருளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்த ஆதரவினை வழங்கிடுமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

பகுதி 4, நாளை வெளியிடுகிறேன்