Wednesday, September 19, 2018

NO to OLD PENSION









This is the mood of the Government against the re-introduction of
OLD PENSION SCHEME.

courtesy: SA post

Tuesday, September 18, 2018

ஓய்வூதியம் என்றால் என்ன? பகுதி 3

"நகரா" தீர்ப்பு
கடந்த கட்டுரை பகுதி 2ல் ஓய்வூதியம் பற்றி ஒரு தெளிவான முடிவிற்கு வந்து சேர்ந்தோம். அதாவது "ஓய்வூதியம் என்பது முன் செய்த பணிக்கு பின் வழங்கும் பின் ஊதியம்" என்பது  புலனாகிறது.

இதன் வழியில்  EPF என்றோ அல்லது CPF என்றோ அழைக்கப்படும் வைப்பு நிதிக்கு இறுதியாக வட்டியுடன் வழங்கப்படும் மொத்த தொகையையும் ஓய்வூதியம் என்றே கொள்ளலாம். Provident Fund விதிப்படி பணியாளரும், பணிவழங்குபவரும் சரியான அளவில் பணம் செலுத்த வேண்டும். பெறும் ஊதியத்தில் பணியாளர் செலுத்தும் பங்கும், அதே அளவு நிர்வாக தரப்பிலும் (தற்போது உச்ச நீதி மன்றம் சில மாறுதல்களை வழங்கி ஆணையிட்டுள்ளது. அதை பின்பு விரிவாக காண்போம்) நிர்ணயிக்கப்பட்ட தொகையில் பிடித்தம் செய்யப்படும். ஒய்வு பெறும்போது அச்சேமிப்புக்கு உரிய வட்டி சேர்த்து மொத்த தொகையாக வழங்கப்படுகிறது. இதை ஈட்டிய ஊதியம்- ஈட்டூதியம் என கணக்கில் கொள்ளலாம். 4வது ஊதியக்குழுவின் கவனத்திற்கு பணியாளர்கள் சார்பாக அளிக்கப்பட்ட மனுவில் PF ல் செலுத்தும் பணத்தை ஒரு வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தி, ஓய்வு பெறும் போது ஈட்டியுள்ள வட்டியிலிருந்து மட்டுமே இறுதியாக பெற்ற ஊதியத்திற்கு இணையான தொகையை ஓய்வூதியமாக மாதா மாதம் வழங்க முடியும் என எடுத்துரைக்க ப்பட்டது. ஆனால் இதன்மேல் இன்று வரையிலும் எவ்வித பதிலும் அரசிடமிருந்து இல்லை. 

இதே முடிவை 1982ல் வியன்னாவில் ஐக்கிய நாட்டு அமைப்பின் ஆலோசனைப்படி கூடிய உலக நாடுகளின் முதியோர் மாநாட்டில் ஓய்வூதியம் என்றால் ஈட்டிய ஊதியம் (Earned Income) என தெளிவாக அறிதியிட்டு பிரகடனம் செய்தது. ஆகவே இது நமது ஈட்டூதியம் அல்லது சேமிப்பு அல்லது தாமதிக்கப்பட்ட ஊதியம் (Deferred pay or wages) என்பதும் புலனாகிறது. இவைகளைப்பற்றி முதலில் நாம் தெளிவானால் தான் அதிகார வர்க்கம் எழுப்பும் அனைத்து தடைகளையும் எதிர்த்து வெற்றி பெறமுடியும்.

இம்மாதிரியான பல முடிவுகள் ஓய்வூதியத்திற்கு ஆதரவாக வரவே இந்திய அரசு தனது நிதித்துறையின் மூலமாக "ஓய்வூதியம் என்பது பரிசு அல்ல அது அரசின் பொறுப்பு" என்ற முடிவினை வெளியிட்டது (U.N.NO.D 2776/EV/52 DT 8.5.1959) அந்த முடிவின் அடிப்படையில் ஓய்வூதியத்தை உரிமையாக கோரி பெற வழிவகை ஏற்பட்டது. ஆனால் அரசு காலப்போக்கில் இதை மறைத்து ஒரு பணியாளர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அரசுடன் யாதொரு தொடர்பும்(No Nexus) இல்லை என்றுரைத்தது. அக்கூற்றினை  நிதி அமைச்சர் தொடங்கி அதிகார வர்க்கம் முழுதும் விடாப்பிடியாக வலியுறுத்தி வந்தனர்.

இவ்வீண் பிடிவாதம் 17.12.1982ல் உச்ச நீதி மன்றம் வழங்கிய உன்னதமான தீர்ப்பால் அடித்து நொறுக்கப்பட்டது. அப்புகழ் பெற்ற தீர்ப்பு தான் "நகரா தீர்ப்பு". "பென்சன் என்பது கருணை தொகை அல்ல". ஓய்வு பெற்ற பணியாளரின் மறுக்க முடியாத உரிமை. பணியிலுள்ள ஒருவர் என்ன வசதியான வாழ்க்கை வாழ்ந்தாரோ அதே நிலையில் அத்துனை வசதிகளுடன் வாழ வேண்டும் என்று அறிதியிட்டு  வழங்கிய தீர்ப்பு. இந்நிலையிலும் மத்திய அரசின் ஓய்வூதிய அமைச்சருடன் தன்னார்வ நிறுவனங்களின் நிரந்தர குழு (Standing committee of voluntary agencies) நடத்திய கலந்துரையாடலின் போது நகரா தீர்ப்பு அரசுக்கு எதிரானது, ஏற்கக் கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதிலிருந்து ஓய்வூதியத்திற்கு எதிரான மனநிலை அதிகார வர்க்கத்தில் ஆழமாக உள்ளது என்பது கண்கூடு். அத்தீர்ப்பின் மூலம் பெறப்பட்ட ஓய்வூதிய உரிமைகளை எவ்வழியாவது பறித்து விட தொடர் முயற்சி அரசு மேற்கொண்டு வருகிறது என்பது நிதர்சனமே. ஆனால் மூத்தோர் பெருந்திரள் ஒருநாளும் அனுமதிக்காது என்பதும் திண்ணமே.

இனி பின்ஊதியம் என்ற ஓய்வூதியம் எவ்வாறெல்லாம் வளர்ந்தது என ஆராயலாமா? வாருங்கள் பகுதி 4க்கு.
தொடரும்.....

Friday, September 14, 2018

ஓய்வூதியம் என்றால் என்ன? பகுதி 2

முந்தையகால ஓய்வூதியம்

ஓய்வூதியம் தொடர்பாக இந்திய நிர்ணய சட்டத்தில் வழங்கப்பட்ட பாதுகாப்பு போன்று
எவ்விதமான அமைப்புகளும் முந்தைய காலங்களில் இல்லை என்றே அறியவருகிறது. மேலும் ஓய்வூதியம் பற்றி விரிவான விளக்கங்கள் இல்லை என்றபோதிலும்  "ஜீவிதம்" என்றொரு அமைப்பு இருந்தது என்றும், அத்துடன் பழைய தமிழ் அகராதியில் உபகாரச் சம்பளம், வருஷாமனம், தெளஜி, பரணம் போன்ற சொற்கள் ஓய்வூதியத்திற்கு பதிலாக   பயன்படுத்தப்பட்டது என்பதும் தெரியவருகிறது. மேலும் கெளடில்யரின் " அர்த்த சாஸ்திரத்தில்" இருவகையான ஓய்வூதியம் பற்றி குறிப்புகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவைகள் தவிர பண்டைய மன்னர்கள் தங்களின் கீழ் பணியாற்றிய மந்திரிமார்கள் மற்றும் அரசவை உயர் அதிகாரிகளுக்கு பொன், பொருள், வீடு, நிலம் பொன்றவற்றை இனாமாக, அவர்களது வாழ்நாள் முழுதும் அனுபவித்துக் கொள்ள, வழங்கி இருந்தனர் என்பதை வரலாற்று நூல்களின் பல பக்கங்களின் பதிவு செய்யப்பட்டு இறைந்து கிடக்கிறது. அத்துடன் போர் படை தளபதிகள், அவர்களின் கீழ் பணியாற்றிய படை வீரர்கள், போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு, என பலதரப்பட்டவர்களுக்கும் பல கிராமங்கள் தானமளிக்கப்பட்டது. அவைகளை பாளையங்கள் என்றும், உரிமையாளர்களை  பாளையக்காரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர் என்பதும் வரலாற்றின் நெடுகிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச் செயல்கள் அனைத்தும் நேரடியாக ஓய்வூதியம் என்ற பெயரில் அழைக்கப்படவில்லையே தவிர,  அனைத்தும் ஓய்வூதியம் போல ஒத்திருந்தது என கணக்கில் கொள்ளலாம்.

ஆனால் 16ஆம் நூற்றாண்டில் வெளியான Century Dictionary (Encyclopedia Lexicon) ல் ஏறக்குறைய சரியான வரையறையினை ஓய்வூதித்தின் பால் வெளியிடுகிறது. அரசுப்பணியில் இருந்த பொது அதிகாரிகள், போர்வீரர்கள், கடற்படை வீரர்கள், போன்ற அனைத்து பணியாளர்கள், பணி விடுப்பு பெற்றவர்கள்,  முழுமையாகவோ அல்லது விபத்தில் காயம்பட்டு உருகுலைந்தவர்கள், அல்லது மரணமடைந்தவர்களின் குடும்பம்  போன்றோர்களுக்கு காலாகாலமாக பெற்று வந்த ஊதிய தொகைக்கு நிகரான தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சுருங்க கூறின் "முன்னர் பணியாற்றிய ஒருவருக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ முன்னர் ஆற்றிய பணிக்கு ஈடாக வழங்கப்படும் பின்னூதியம்" என கணிக்கலாம்.

மேற் குறிப்பிட்ட விபரங்களை தெளிவாக கவனத்தில் கொண்டு நான்காவது ஊதியக்குழு தனது அறிக்கையில் பத்தி 2 மற்றும் 3 ல் பதிவு செய்தது."நல்ல ஓய்வூதியம் என்பது பணிகாலத்தில் பெற்ற நன்மைகள் போல ஓய்வு காலத்தில் மதிக்கப்படவேண்டும்" என்றும் பிரகடனப்படுத்தியது.  

தொடரும்....

Tuesday, September 11, 2018

ஓய்வூதியம் என்றால் என்ன? பகுதி 1

ஓய்வூதிய தொடக்கம்

" பென்சனா அதுல என்ன சார் இருக்கு தெரியிரதுக்கு ... அது என்ன ஒரு தலைவரா? அல்லது ஒரு அரசியல் கட்சியா? தொடக்கம், வளர்ச்சி, வரலாறு என்று சொல்லுவதற்கு.

'இப்ப போயி இத பேசிக்கிட்டு, ஏதாவது பணம் கூட்டிக்குடுக்கிறாங்களானு பாருக்க சார். சென்ட்ரல் கவர்மெண்டில் 2% டிஏ சொல்லியாச்சாம் நமக்கு எப்பனு சொல்லுங்க " போன்ற சொல்லாடல்கள் தான் தற்போது அதிகமாக நமது காதுகளில் ஒலிக்கின்ற குரலாக இருக்கிறது.

ஓய்வூதியத்தின் ஆதித்தோற்றுவாய், அதன் வளர்ச்சி, இன்றைய நிலை (பாங்களிப்பு ஓய்வூதியம்) போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறை இன்மையே காரணம். திரைப்படம் ஒன்றில் சிரிப்பு நடிகர் திரு. வடிவேலு அவர்கள் சொல்வது போல " பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மண்ட் வீக்" என்பது போல ஓய்வூதியத்தின் அடிப்படை தெரியாமல் நம்மில் பல பேர் ஓய்வூதியம் பற்றி பேசி வருகிறோம்.

ஓய்வூதியம் என்பது ஒரு பள்ளிப் பாடமல்ல. பல சிக்கல்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு விதித் தொகுப்பு. இதற்கான சட்டங்களையும் விதிகளையும் உள்ளடக்கி ஆணைகளாக வெளியிட்டுள்ள மத்திய, மாநில அரசுகள் இதன்மீது எவ்வித சட்ட வறையறைகளை (Constitutional definition) உருவாக்கி இணைக்க வில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு சட்ட வடிவு அல்லது ஒரு விதியின் வடிவு என்றால் அவைகள் முக்கியமாக எந்தப் பொருளை குறிக்கின்றதோ அந்த சொல் அல்லது சொற்றொடரின் வறையறை (Definition) இல்லாவிடில் அவை முழுமையான சட்டமாகவோ அல்லது விதியாகவோ கணக்கில் கொள்ள முடியாது.

முதல் ஊதியக்குழுவிலிருந்து நான்காவது ஊதியக்குழு வரையிலும் வறையறைகள் ஏதுமில்லா நிலையில் ஊதியக்குழுக்கள் தத்தம் பரிந்துரைகளை அரசுக்கு சமர்பித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக ஐந்தாவது ஊதியக்குழுவும் அமைக்கப்பட்டு ஓய்வூதிய சங்கங்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டது. இதுவரையிலும் வாளாவிருந்த சங்கங்கள் இம்முறை கடுமையாக வாதாடியும், தொடர்ந்த வற்புறுத்தலாலும்  ஓய்வூதியம் பற்றிய வறைமுறைகள் ஊதிய குழு அறிக்கை பாரா 127(2) சேர்க்கப்பட்டது. அதுவும் முத்தாய்ப்பாக இந்திய அரசியல் சட்டத்தின்  366(17) பிரிவின் படி நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த வறையறையினை பதிவு செய்தது.

366(17) ன் சுருக்கம் " Pension means a pension, and includes Retired Pay so payable whether contributory or not, of any kind whatsoever payable to or in respect of any person and any sum or sums so payable by way of the return, with or without interest there on or any other addition thereto, of subscription to a provident fund"

இவை போன்ற ஒரு பாதுகாப்பு பண்டைய காலத்தில் இருந்ததா?

இக்கேள்விக்கான பதிலை பகுதி 2 ல் தேடுவோம்... தொடரும்...

Tuesday, September 4, 2018

ஓய்வூதியம் என்றால் என்ன?

லிபரலைஸ்டு பென்சன் ரூல்ஸ்- சிறு அறிமுகம் என்ற தலைப்பின் தொடர்சியாக ஓய்வூதியம் என்றால் என்ன? என்பது பற்றி எழுத விழைகிறேன்.

மொபைல் போனின் தட்டச்சு கருவியில் இத்தலைப்பை பதியும் போது எனக்கு சிரிப்புதான் வந்தது. நான் ஓய்வு பெற்று ஏறக்குறைய 10ஆண்டுகள் கடந்த பின், இன்று வரையிலும் தடங்கல் இல்லாமல் ஓய்வூதியம் பெற்றுவரும் நிலையில் இத் தலைப்பு பற்றி பதிவிடுவது சரிதானா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். கேள்வி தான் இருந்ததே தவிர பதில் இல்லை. பதில் இல்லை என்ற தைரியத்தில் தொடர்ந்து எழுத துணிந்தேன்.

நீண்ட இடைவேளைக்குப் பின்னால் எனது ஞாபக மூட்டையை அவிழ்க்க நினைக்கிறேன். அதில் அறுதப்பழசுகளும் வரலாம் பல அற்புத நினைவுகளும் காட்சிப்படலாம். அற்புதங்களை வரவேற்று வாழ்த்தும் வேளையில் அறுதப்பழசுகளை அறவே ஒதுக்கி என்னை காக்க வேண்டுகிறேன். 

சுதந்திர இந்தியாவில் பிறந்த எனக்கு Pension act 1871 பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது என்று சொன்னால், அதற்கான தியாகங்கள் புரிந்த எனது பெறுமதிப்பிற்குரிய மூத்த முன்னோர்கள் விட்டுச்சென்றுள்ள வரலாற்று நிகழ்வுகளும், அவைகளை தாங்கி நிற்கின்ற  எழுத்துக்களும் தான் என்பதை இங்கு அறிதியிட்டு, நன்றி கலந்த வணக்கத்துடன்  சொல்லவிழைகிறேன். வரலாற்று நிகழ்வுகளை குறிப்பிடும் போது மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பதில் நான் அதிகபட்ச கவனத்துடன் இருப்பேன் என்பது எனது தார்மீக கடமையாகும்.

இப்போதும் வழக்கம்போல் நல்லதை எடுத்து அல்லதை விடுத்து அன்னம் போல் இருப்போம் என்று என்பால்  நீங்கள் எடுத்துள்ள முடிவு எனக்கு நம்பிக்கையளிக்கிறது. நீண்ட நெடிய வரலாறு உள்ள இப் பொருள் பற்றி குறுகிய பக்கங்களில் நிரப்ப முடியாததால் வாரம் ஒரு பதிவு என்ற முறையில் தொடராக எழுத எத்தனிக்கிறேன். இப்பொருள் குறித்து கடுகளவு அறிவுடையவனாகிய நான் கடும் முயற்சியில் இறங்குகிறேன். அளவிடா புலமை பெற்ற பலர் இதை வாசிக்கும் வாய்ப்பை பெறலாம், அவ்வேளையில் தவறுகள் கண்டிடின்   சுட்டிக்காட்டினால் உடன் சரிசெய்து கொள்கிறேன்.
உங்கள் ஆதரவு என்னை வீறுகொண்டு எழச் செய்யவேண்டும் என்பது மட்டுமே எனது அவா.        முதல் பதிவு வரும் சில நாட்களில்.    நன்றி.

Monday, September 3, 2018

முழு ஓய்வூதியம் பெற பணிக்காலம் குறைப்பு- அரசாணை வெளியீடு.

அரசாணை 461/நிதித்துறை(ஓய்வூதியம்)நாள் 31.07.1996 ன் படி அரசுப்பணியாளர் ஒருவர் 01.07.1996 முதல் முழு ஓய்வூதியம் பெறுவதற்க்கு 30 ஆண்டுகள் பணி புரிந்திருந்தாலே போதும் என ஆணையிடப்பட்டது. இதற்கு முன் அதாவது 01.10.1979 முதல் 01.07.1996 இடைப்பட்ட காலத்தில் ஓய்வூ பெற்றவர்களுக்கும் இப் பலன் நீட்டித்து வழங்க வேண்டும் என எழுப்பப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால் நீதிமன்றங்களுக்கு வழக்காக எடுத்துச்செல்லப்பட்டது. பல நீதிமன்றங்களில் நடந்த பல போராட்டங்களுக்குப் பிறகு இறுதியாக உச்ச நீதிமன்றத்தில் ஓய்வூதியர்களுக்கு சாதகமான தீர்ப்பு பெறப்பட்டது. அத்தீர்ப்பின் அடிப்படையில் கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

அரசாணை எண் 245 நாள் 19.07.2018 ன் படி, 01.10.1979 முதல் 01.07.1996 வரையிலான காலத்தில் ஓய்வு பெற்ற அனைத்துப் பணியாளர்களுக்கும் முழு ஓய்வூதியம் பெற 30 ஆண்டுகள் தகுதியான பணிக்காலம் இருந்தாலே போதும் என ஆணையிடப்பட்டுள்ளது.

தகுதியுள்ள ஓய்வூதியர்கள் அதற்கான வேண்டுகோள் கடிதத்தினை தங்கள் பணிபுரிந்த துறையின் மூலம் விண்ணப்பித்து ஓய்வுதியத்தினை மறு நிர்ணயம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந் நிர்ணயத்தின் மூலம் கணக்கிடப்படும் நிலுவைத் தொகை உடன் வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் காலமான ஓய்வூதியர்களின் வாரிசுதாரர்கள் மனு அளித்து நிலுவைத் தொகை பெற்றுக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசாணை எண் Ms No. 245, Dated 19th July 2018. 
பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.