Wednesday, September 19, 2018
Tuesday, September 18, 2018
ஓய்வூதியம் என்றால் என்ன? பகுதி 3
இதன் வழியில் EPF என்றோ அல்லது CPF என்றோ அழைக்கப்படும் வைப்பு நிதிக்கு இறுதியாக வட்டியுடன் வழங்கப்படும் மொத்த தொகையையும் ஓய்வூதியம் என்றே கொள்ளலாம். Provident Fund விதிப்படி பணியாளரும், பணிவழங்குபவரும் சரியான அளவில் பணம் செலுத்த வேண்டும். பெறும் ஊதியத்தில் பணியாளர் செலுத்தும் பங்கும், அதே அளவு நிர்வாக தரப்பிலும் (தற்போது உச்ச நீதி மன்றம் சில மாறுதல்களை வழங்கி ஆணையிட்டுள்ளது. அதை பின்பு விரிவாக காண்போம்) நிர்ணயிக்கப்பட்ட தொகையில் பிடித்தம் செய்யப்படும். ஒய்வு பெறும்போது அச்சேமிப்புக்கு உரிய வட்டி சேர்த்து மொத்த தொகையாக வழங்கப்படுகிறது. இதை ஈட்டிய ஊதியம்- ஈட்டூதியம் என கணக்கில் கொள்ளலாம். 4வது ஊதியக்குழுவின் கவனத்திற்கு பணியாளர்கள் சார்பாக அளிக்கப்பட்ட மனுவில் PF ல் செலுத்தும் பணத்தை ஒரு வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தி, ஓய்வு பெறும் போது ஈட்டியுள்ள வட்டியிலிருந்து மட்டுமே இறுதியாக பெற்ற ஊதியத்திற்கு இணையான தொகையை ஓய்வூதியமாக மாதா மாதம் வழங்க முடியும் என எடுத்துரைக்க ப்பட்டது. ஆனால் இதன்மேல் இன்று வரையிலும் எவ்வித பதிலும் அரசிடமிருந்து இல்லை.
இதே முடிவை 1982ல் வியன்னாவில் ஐக்கிய நாட்டு அமைப்பின் ஆலோசனைப்படி கூடிய உலக நாடுகளின் முதியோர் மாநாட்டில் ஓய்வூதியம் என்றால் ஈட்டிய ஊதியம் (Earned Income) என தெளிவாக அறிதியிட்டு பிரகடனம் செய்தது. ஆகவே இது நமது ஈட்டூதியம் அல்லது சேமிப்பு அல்லது தாமதிக்கப்பட்ட ஊதியம் (Deferred pay or wages) என்பதும் புலனாகிறது. இவைகளைப்பற்றி முதலில் நாம் தெளிவானால் தான் அதிகார வர்க்கம் எழுப்பும் அனைத்து தடைகளையும் எதிர்த்து வெற்றி பெறமுடியும்.
இம்மாதிரியான பல முடிவுகள் ஓய்வூதியத்திற்கு ஆதரவாக வரவே இந்திய அரசு தனது நிதித்துறையின் மூலமாக "ஓய்வூதியம் என்பது பரிசு அல்ல அது அரசின் பொறுப்பு" என்ற முடிவினை வெளியிட்டது (U.N.NO.D 2776/EV/52 DT 8.5.1959) அந்த முடிவின் அடிப்படையில் ஓய்வூதியத்தை உரிமையாக கோரி பெற வழிவகை ஏற்பட்டது. ஆனால் அரசு காலப்போக்கில் இதை மறைத்து ஒரு பணியாளர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அரசுடன் யாதொரு தொடர்பும்(No Nexus) இல்லை என்றுரைத்தது. அக்கூற்றினை நிதி அமைச்சர் தொடங்கி அதிகார வர்க்கம் முழுதும் விடாப்பிடியாக வலியுறுத்தி வந்தனர்.
இவ்வீண் பிடிவாதம் 17.12.1982ல் உச்ச நீதி மன்றம் வழங்கிய உன்னதமான தீர்ப்பால் அடித்து நொறுக்கப்பட்டது. அப்புகழ் பெற்ற தீர்ப்பு தான் "நகரா தீர்ப்பு". "பென்சன் என்பது கருணை தொகை அல்ல". ஓய்வு பெற்ற பணியாளரின் மறுக்க முடியாத உரிமை. பணியிலுள்ள ஒருவர் என்ன வசதியான வாழ்க்கை வாழ்ந்தாரோ அதே நிலையில் அத்துனை வசதிகளுடன் வாழ வேண்டும் என்று அறிதியிட்டு வழங்கிய தீர்ப்பு. இந்நிலையிலும் மத்திய அரசின் ஓய்வூதிய அமைச்சருடன் தன்னார்வ நிறுவனங்களின் நிரந்தர குழு (Standing committee of voluntary agencies) நடத்திய கலந்துரையாடலின் போது நகரா தீர்ப்பு அரசுக்கு எதிரானது, ஏற்கக் கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதிலிருந்து ஓய்வூதியத்திற்கு எதிரான மனநிலை அதிகார வர்க்கத்தில் ஆழமாக உள்ளது என்பது கண்கூடு். அத்தீர்ப்பின் மூலம் பெறப்பட்ட ஓய்வூதிய உரிமைகளை எவ்வழியாவது பறித்து விட தொடர் முயற்சி அரசு மேற்கொண்டு வருகிறது என்பது நிதர்சனமே. ஆனால் மூத்தோர் பெருந்திரள் ஒருநாளும் அனுமதிக்காது என்பதும் திண்ணமே.
இனி பின்ஊதியம் என்ற ஓய்வூதியம் எவ்வாறெல்லாம் வளர்ந்தது என ஆராயலாமா? வாருங்கள் பகுதி 4க்கு.
Friday, September 14, 2018
ஓய்வூதியம் என்றால் என்ன? பகுதி 2
முந்தையகால ஓய்வூதியம்
ஓய்வூதியம் தொடர்பாக இந்திய நிர்ணய சட்டத்தில் வழங்கப்பட்ட பாதுகாப்பு போன்று
எவ்விதமான அமைப்புகளும் முந்தைய காலங்களில் இல்லை என்றே அறியவருகிறது. மேலும் ஓய்வூதியம் பற்றி விரிவான விளக்கங்கள் இல்லை என்றபோதிலும் "ஜீவிதம்" என்றொரு அமைப்பு இருந்தது என்றும், அத்துடன் பழைய தமிழ் அகராதியில் உபகாரச் சம்பளம், வருஷாமனம், தெளஜி, பரணம் போன்ற சொற்கள் ஓய்வூதியத்திற்கு பதிலாக பயன்படுத்தப்பட்டது என்பதும் தெரியவருகிறது. மேலும் கெளடில்யரின் " அர்த்த சாஸ்திரத்தில்" இருவகையான ஓய்வூதியம் பற்றி குறிப்புகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவைகள் தவிர பண்டைய மன்னர்கள் தங்களின் கீழ் பணியாற்றிய மந்திரிமார்கள் மற்றும் அரசவை உயர் அதிகாரிகளுக்கு பொன், பொருள், வீடு, நிலம் பொன்றவற்றை இனாமாக, அவர்களது வாழ்நாள் முழுதும் அனுபவித்துக் கொள்ள, வழங்கி இருந்தனர் என்பதை வரலாற்று நூல்களின் பல பக்கங்களின் பதிவு செய்யப்பட்டு இறைந்து கிடக்கிறது. அத்துடன் போர் படை தளபதிகள், அவர்களின் கீழ் பணியாற்றிய படை வீரர்கள், போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு, என பலதரப்பட்டவர்களுக்கும் பல கிராமங்கள் தானமளிக்கப்பட்டது. அவைகளை பாளையங்கள் என்றும், உரிமையாளர்களை பாளையக்காரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர் என்பதும் வரலாற்றின் நெடுகிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச் செயல்கள் அனைத்தும் நேரடியாக ஓய்வூதியம் என்ற பெயரில் அழைக்கப்படவில்லையே தவிர, அனைத்தும் ஓய்வூதியம் போல ஒத்திருந்தது என கணக்கில் கொள்ளலாம்.
ஆனால் 16ஆம் நூற்றாண்டில் வெளியான Century Dictionary (Encyclopedia Lexicon) ல் ஏறக்குறைய சரியான வரையறையினை ஓய்வூதித்தின் பால் வெளியிடுகிறது. அரசுப்பணியில் இருந்த பொது அதிகாரிகள், போர்வீரர்கள், கடற்படை வீரர்கள், போன்ற அனைத்து பணியாளர்கள், பணி விடுப்பு பெற்றவர்கள், முழுமையாகவோ அல்லது விபத்தில் காயம்பட்டு உருகுலைந்தவர்கள், அல்லது மரணமடைந்தவர்களின் குடும்பம் போன்றோர்களுக்கு காலாகாலமாக பெற்று வந்த ஊதிய தொகைக்கு நிகரான தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சுருங்க கூறின் "முன்னர் பணியாற்றிய ஒருவருக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ முன்னர் ஆற்றிய பணிக்கு ஈடாக வழங்கப்படும் பின்னூதியம்" என கணிக்கலாம்.
மேற் குறிப்பிட்ட விபரங்களை தெளிவாக கவனத்தில் கொண்டு நான்காவது ஊதியக்குழு தனது அறிக்கையில் பத்தி 2 மற்றும் 3 ல் பதிவு செய்தது."நல்ல ஓய்வூதியம் என்பது பணிகாலத்தில் பெற்ற நன்மைகள் போல ஓய்வு காலத்தில் மதிக்கப்படவேண்டும்" என்றும் பிரகடனப்படுத்தியது.
தொடரும்....

